துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.10.09

’குற்றமும் தண்டனையும்’-கடிதமும்,பதிவும்

’குற்றமும் தண்டனையும்’நாவல்மொழிபெயர்ப்புப்பற்றி வாசக அன்பர் திரு இளங்கோ அவர்கள் எனக்கொரு மின் அஞ்சல் அனுப்பியதோடு அந்நூல்பற்றித் தன் வலையிலும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புள்ள சுசீலா அம்மா அவர்களுக்கு,

தாங்கள் மொழி பெயர்த்த 'குற்றமும் தண்டனையும்' புத்தகத்தை படித்து முடித்து விட்டு, உங்களுக்கு இம் மடலை வரைகின்றேன். உங்கள் உழைப்பை என்னவென்று சொல்வது ? நன்றிகள் மட்டுமே என்னால் சொல்ல முடியும். வாழ்க தங்கள் தொண்டு.

நாவலை பற்றி என்னுடைய, வலை தளத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதி உள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும்.
http://ippadikkuelango.blogspot.com/2009/09/crime-and-punishment.html

நன்றியுடன்
இளங்கோ


திரு இளங்கோவின் வலைப்பதிவு
ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம்.

ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று.

கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்."

"அண்ணா என்ன சொல்லி கொண்டிருக்கிறாய் நீ. எப்படியானாலும் நீ ரத்தம் சிந்த வைத்திருக்கிறாய் என்பது உண்மைதானே ? " தங்கை.

"எல்லோரும்தான் ரத்தம் சிந்தி கொண்டிருக்கிறீர்கள், இந்த பூமியில் எப்போதுமே மனித குல வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கிற எல்லா காலங்களிலும் ரத்தம் பிரவாகமாக ஓடி கொண்டுதான் இருக்கிறது. 'ஷம்பைனை' உடைத்து ஊற்றியது போல ரத்தம், இங்கே பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது !. அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் ! பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது ! சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன்! ஆனால் இப்போது வலையில் வீழ்ந்து விட்டேன்."

ஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா? . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்.

பக்கம் பக்கமாய் உரையாடல்கள், மனதை படிப்பது போல. குற்றம் செய்தவனின் மன நிலைக்கு பக்கத்தில் நம்மை இட்டு செல்கிறது ரஷ்ய நாவலான, குற்றமும் தண்டனையும். பியாதோர் தஸ்தெவெஸ்கி எழுதியுள்ள இந்நாவலை, எம்.ஏ.சுசீலா அம்மையார் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு மேல் இரவில் படித்து முடித்தேன். நான் படித்த நாவல்களில் பெரிய நாவல் இதுதான். நாவலில் வரும் அத்தனை கதை மாந்தர்களின் பேர்தான் ரஷ்ய மொழியே தவிர, அவர்களை நாம் நம்முடைய ஊரிலும் பார்க்கலாம்.

நாவலில் வரும், ரஸ்கொல்நிகொவ் தான் கதாநயகன். கொலையை செய்தவனும் இவனே. இவனின் அம்மாவாக வரும் பல்கேரியா, தங்கையாக வரும் துனியா, நண்பனாக வரும் ரசூமிகின், காதலியாக வரும் சோனியா... அடுக்கி கொண்டே போகலாம். பாத்திர படைப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு நன்றாக தெரிந்த பக்கத்து வீட்டு நபர்களை போல கொண்டு செல்கிறது நாவல்.

இதை தமிழில் மொழி பெயர்த்து என் போன்ற நபர்களை படிக்க தூண்டிய, சுசீலா அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. 550 பக்கங்களுக்கு மேலாக மொழி பெயர்த்த அவர்களின் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்




அடுத்ததாக ஒரு மாதம் முன்பு,சவுதிஅரேபியாவிலிருந்து முகம் தெரியாத ஒரு அன்பர் உணர்ச்சிப்பெருக்குடன் ‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய தன் மனப் பதிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் தொலைபேசி வழி பகிர்ந்து கொண்டார்.அவருக்கும் என் நன்றி.

தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றுமொரு உலகப்புகழ்பெற்ற நெடிய நாவலான ‘இடியட்’டின் மொழிபெயர்ப்புப் பணியில் நான் தீவிரமாக முனைந்திருக்கும் இவ்வேளையில் ,இவ்வாறான ஊக்கமொழிகள் என்னை உற்சாகத்தோடு செயல்படவைக்கின்றன.

புத்தாண்டில் ‘இடியட்’ மொழியாக்கம் மதுரை பாரதி புத்தகநிலையத்தாரின் வெளியீடாக வரவிருக்கிறது என்ற நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

’இடியட்’நாவலின் மையப்பாத்திரம் இளவரசன் மிஷ்கின்

3 கருத்துகள் :

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி...
தங்கள் தமிழ்பணி தொடர வாழ்த்துக்கள்.

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

அம்மா நான் இலக்கியத்திற்கு மிக புதியவன் ...........
நானும் கட்டாயம் படித்து விட்டு சொல்கிறேன் .......
அம்மா இந்த பிள்ளையின் பதிவுகள் எப்படி இருக்கிறது என்பதை படித்து விட்டு
திருத்த வேண்டும் ....dostoveskiyai அறிந்தவர் நீங்கள் அதனால் மதிப்பு அதிகம் ஆகிறது அம்மா

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

அம்மா நான் இலக்கியத்திற்கு மிக புதியவன் ...........
நானும் கட்டாயம் படித்து விட்டு சொல்கிறேன் .......
அம்மா இந்த பிள்ளையின் பதிவுகள் எப்படி இருக்கிறது என்பதை படித்து விட்டு
திருத்த வேண்டும் ....dostoveskiyai அறிந்தவர் நீங்கள் அதனால் மதிப்பு அதிகம் ஆகிறது அம்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....