துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(3)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சீதை சிறையிருந்த அசோகவனம்,இலங்கையிலுள்ள நுவரேலியாவில் இருப்பதாகவும்,இராமாயண காவியத்துடன் தொடர்பு கொண்டவைகளாகக் கிட்டத்தட்ட 50 இடங்களை இலங்கையில் காண முடியும் என்றும் விவரித்துக் கொண்டே வந்தார் வழிகாட்டி அஜித்.
அவற்றில் இயற்கை இறந்த பல அதிபுனைவுகளும் கலந்தே இருந்தன.

-சீதைக்கு முன்பாகத் தன் விசுவ ரூப தரிசனத்தைக் காட்டித் தான் இராமதூதன் என்பதைப் புரிய வைத்த அனுமனின் பாதச் சுவடுகளை இன்னும் அங்கே காண முடிகிறது....

-சீதை விட்ட கண்ணீர், எந்தப்பஞ்ச காலத்திலும் கூட வற்றாமல் ஒருபொய்கையைப் போலத் தேங்கியபடி,சாஸ்வதமாய் அப்படியே இருக்கிறது; அந்த நீரை ஒரு பிரசாதமாகக் கருதிப்போற்றும் மக்கள் கூட்டமும் இருக்கிறது....

-இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற அந்தக் குறிப்பிட்ட பாதையில் இப்போதும் ஒரு புல் கூடமுளைப்பதில்லை...

-இராம-இராவண யுத்தம் நடந்த போர்க் களத்தில் உள்ளங்கையை வைத்துப்பார்த்தால் அது சிவப்பாகி விடுகிறது......

இந்த ரீதியில் அவர் கதைத்துக் கொண்டே போன செய்திகள் பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ...,இன்றைய சமகால நிகழ்வுகளோடு ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போவதை உணர்ந்த என் மனம், அந்தச் செய்திகள் எல்லாவற்றையும் அந்தப் போக்கிலேயே முடிச்சுப் போட்டுப் பொருத்திப் பார்த்து ஆராய்ந்தபடி இருந்தது.(சிறைக் கூடங்களும்,கண்ணீர்ப் பெரு மூச்சுக்களும் எந்த நாளிலும் சிங்களத்திற்கே உரிய தனிச் சிறப்பாக அல்லவா ஆகி விட்டிருக்கிறது?)

உணவுக்குப் பின் முதன் முதலாகப்பேருந்திலிருந்து எங்களை இறக்கிவிட்ட இடம்,ஒரு பௌத்தக் கோயில்.
இந்தியாவிலுள்ள சாரநாத்தில்,பல நாட்டுப் புத்தர் ஆலயங்களையும் விரிவாகப் பார்த்து முடித்து விட்டிருந்ததால் குறிப்பிட்ட இந்தக் கோயில் என்னை மிகுதியாகப் பாதிக்கவில்லை.
ஆனால், அங்கேயும் சில செய்திகள் காத்திருந்தன.
நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்குச் சாட்சியாக இருக்க விருப்பமில்லாதவை போல, அங்கே இருந்த சில புத்தர் சிலைகள் உறங்கும் கோலத்தில் இருந்தது,எனக்குச் சற்று ஆறுதலாகக்கூட இருந்தது.

அந்தக் கோயிலின் வேறுபாடான அம்சமாக நான் உணர்ந்தது,புத்தர் சிலைகளைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் தென்பட்ட -இந்துக் கடவுளரை நினைவுறுத்தும் பல உருவங்களைத்தான்...பிள்ளையாரையும்,முருகனையும்,விஷ்ணுவையும், இலக்குமி,சரசுவதி போன்ற பெண் கடவுளரையும் ஒத்திருக்கும் பற்பல சுதை உருவங்கள் புத்தரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.



யானையின் துதிக்கை,நெகிழ்ச்சியின்குறியீடு;

பருந்துப் பார்வை ,கூர்மையின்குறியீடு;

மயில்,அழகின் குறியீடு;

பன்றியின்காது,புலனறி திறனின்குறியீடு;

யாளி (dragon )யின் வாய்,உறுதிப்பாட்டின் குறியீடு

என்று அவற்றுக்கான தொன்மக் குறியீட்டு விளக்கங்கள் தரப்பட்டபோதும்,அந்தக் கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும் இன்னும் ஆழ்ந்த பார்வையுடன் நோக்கப் பட வேண்டியவை என்றே எனக்குப் பட்டது.



அந்தக் கோயிலின் பருத்தமேற்கூரை(dome),
கருவுற்ற பெண்ணை நினைவுபடுத்துவதாக உள்ளதால்,கருவுற்ற பெண்கள் அந்தக் கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகக் கூடும் என்ற நம்பிக்கையும் கூட அங்கே நிலவி வருவதை அறிய முடிந்தது.
புத்தர் கோயிலை ஒட்டியே இருந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்ல நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதால் தேர்த் திருவிழாக் கோலாகலத்தில் இருந்த அதை வீதியிலிருந்தபடியே தரிசித்து முடித்து வண்டியில் ஏறிக்கொண்டோம்.

தொடர்ந்து ,

-அனுராதபுரத்தில் இருக்கும் புத்தர் சிலையைப் போல ஒற்றைக்கல்லில்(monolithic) உருவாக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை,

-இன்று அருங்காட்சியகங்களாகவும்,காவல்துறை மற்றும் பிற அரசு அலுவலகங்களாகமாறிப் போயிருக்கும் அந்தக்காலத்துக் காலனிஆதிக்கக் கட்டிடங்கள்,

-சிங்களத் தொலைக்காட்சி நிலையமாகிய ரூபவாஹினி,

-வழி நெடுகத் தென்படும் அசோகமரங்கள், ஆல மரங்கள்....
என்று பேருந்து ஓட்டத்திலேயே பல காட்சிகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம்....

ஒரு நாட்டின் தலைநகரம் என்பதற்கான கட்டமைப்புக்களை....சீரான நேர்த்திகளை இந்தக்குறுகியபயணத்தில் எதிர்ப்படும் வாய்ப்பு மிகுதியாகக் கிடைக்காததனாலோ அல்லது சாஸ்வதமான பதட்டமும் போர்ச்சூழலுமே நிலவி வந்த காரணத்தால் தலைநகரின் மேம்பாட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனதாலோ .....,தமிழ் நாட்டின் ஒரு சாதாரண நகரத்தை விடவும் கூடச் சுமாரானதாகவே கொழும்பு என் கண்களுக்குப்புலப்பட்டது.

அடுத்தாற்போல எங்களை இறக்கிய இடம் இலங்கையின் சுதந்திர சதுக்கம்.

அங்கேயும் கூட சேனநாயகாவின் சிலைப் பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழே கண்ணில்பட்டு என்னை நீர் மல்கச் செய்தது.

காலங்காலமாய் ஒருதாய்ப் பிள்ளைகளாக ஒன்றி வாழ்ந்த இரு இனங்களுக்குள் தூர்க்க முடியாதபடி இன்று எத்தனை அகழிகள்!
சாமானியச் சிங்களனும் சாமானியத் தமிழனும் இப்பொழுதும் கூடக் கை குலுக்கி வாழ ஆசைப்படுவது ஒரு புறம் இருந்துகொண்டுதானிருக்கிறது என்றபோதும் சுலபத்தில் ஒருவரை ஒருவர் அணுக முடியாமல் எத்தனை மனத் தடைகள்!

கிரிக்கெட் பந்து வடிவிலிருக்கும் மங்குஸ்தான் பழங்களையும்,
‘ருசியில் சொர்க்கம்,வாசனையில் நரகம்’என்று கூறப்படும் துரியன் பழங்களையும் சிங்கப்பூர்,மலேசியாபோன்றே இங்கும் அதிகமாகக் காண முடிந்தது.
(சிங்கப்பூரின் சில பொது இடங்களில் துரியன் பழத்தைக்கொண்டு செல்லக்கூடாது என்ற விசேட அறிவிப்புக் கூடக்காணப்படுவதுண்டு;காரணம் அதன் ’வாசனை’யிலுள்ள மகிமைதான்.)

‘ஆஷ் பனானா’ என்று சொல்லப்படும் சற்றே சாம்பல் நிறத்தில் இருக்கும் வாழைப் பழங்கள் அங்கே குவிந்து கிடப்பதை எங்களுக்குச் சுட்டிக் காட்டிய அஜித் ,அதனுடன் கூடவே அதிர்ச்சியான வேறொரு தகவலையும் அஞ்சல் செய்தார்;அந்தப்பழங்கள் மனித சக்தியைக்குறைப்பவை என்பதால் சிறையிலுள்ள கைதிகளுக்கு அவை தரப்படுவது அங்கே வழக்கமாம்.(சிறைப் பட்டவர்களுக்கு எப்படியெல்லாம் துன்பம் தரலாம் என்று இவர்கள் உட்கார்ந்து யோசிப்பார்கள் போலிருக்கிறது)

மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும் (அதைக் கூட dead city ஆகி விடும் என்றுதான் அமங்கலமாக வருணித்தார் அவர்) என்று சொன்னபடி,பொருட்கள் வாங்க விரும்பினால் வாங்கலாம் என்று மிகமிகச் சாதாரணமான வணிக வளாகம் ஒன்றில் எங்களைக் கொண்டுபோய் இறக்கி விட்டார் வழிகாட்டி.நானும்,இப் பயணத்தில் என்னைப் போல ஒற்றை ஆளாக வந்து என் அறைத் தோழியாக வாய்த்த சென்னையைச் சேர்ந்த சாரதாவும் அந்த வளகத்தை வெறுமே ஒரு முறை சுற்றி வந்துவிட்டு எதிரிலிருந்த நம்மூரைப் போன்ற டீக் கடையில் காப்பி குடிக்கச் சென்றோம்.

(பயணம் தொடரும்)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....