துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.2.09

சிறகுலகில் மீண்டும்....சூர்சரோவர்


















பரத்பூருக்கு மிக அருகாமையிலேயே உள்ள மற்றுமொரு அற்புதமான பறவைகள் சரணாலயம்,' சூர் சரோவர்'. ஆக்ரா-தில்லி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்ராவுக்கும் மதுராவுக்கும் இடையே(ஆக்ரா நகர எல்லை முடிவடையும் இடத்திலேயே இந்த இடம் நம் கண்களில் பட்டுவிடுகிறது) அமைந்துள்ள இப்பகுதி, கண்ணனின் வடமதுரைக்குப்பக்கத்தில் அமைந்திருப்பதனாலோ என்னவோ, கண்ணனும்,ராதையும் காதலிசை பாடிக்களித்த இடமாகக்கருதப்படுகிறது. அந்தக்காதலை மையமாக்கி 'பக்தி காவ்யம்' என்ற கவிதை நூலைப்படைத்த கவி சூர்தாசின் நினைவாகவே 'சூர்சரோவர்' என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இச்சரணாலயம்,எங்கோ தொலைதேசங்களிலிருந்தெல்லாம் இளைப்பாற வரும் பலவகைப்பறவைகளுக்கு இனியதொரு புகலாகத்திகழ்கிறது.1991 ஆம் ஆண்டு முதல் 'பறவைகள் சரணாலய'மாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில், பிற இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகளும் உண்டு;இங்கேயே நிலையாகக்குடியிருக்கும் பறவைகளும் உண்டு. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் கிட்டத்தட்ட 126 இனங்களைச்சேர்ந்த புள்ளினங்கள்,இங்கே இருப்பதாகக்கண்டறியப்பட்டிருக்கிறது.
4.03 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட இப்பகுதி, 7.83சதுர கி.மீ அளவுக்கு அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.செயற்கையான வனப்பகுதிகளும்,சதுப்புநிலக்காடுகளும் இங்கே புகல் தேடி வரும் பறவைகளின் வசதிக்காகப்புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

சூர்சரோவரின் தனிச்சிறப்பு. ஐங்கோண வடிவில் இங்கே விரிந்து பரந்து கிடக்கும் அற்புதமான ஆழமான ஏரி. ஏரிக்குள் படகில் பயணிக்கையில் ஆங்காங்கே புதர்களில் கூட்டம் கூட்டமாக, கொத்துக்கொத்தாக நம் கண்களுக்குத்தென்படுபவை, இளஞ்சிவப்பு நிறம் கொண்ட 'பெலிகன்'நாரைகள். ஒரே இடத்தில் இத்தனை நாரைகளை ஒட்டுமொத்தமாக- ஒன்றாகக்காண்பது,பரவசச்சிலிர்ப்பூட்டும் அருமையான,அதிசயமான ஒரு அனுபவம். ஏரியின் வற்றாத நீர்ப்பரப்பும், அங்கு நிலவும் இதமான தட்ப வெப்பமும் பறவைகளுக்கு இதமளித்தபோதும், கடலைப்போன்ற அதன் ஆழம் அவற்றுக்குப்பாதகமாகவே இருக்கிறது.ஏரிக்குள் கால் பதித்து நின்று வேட்டையாடவும்,புதர்களுக்குள் கூடுகளை அமைத்துக்கொண்டுகுடியிருக்கவும் அவ்வாறன இடத்தில் வாய்ப்பு சற்றே குறைவு என்பதாலேயே- இத்தனை அழகு கொஞ்சும் இந்த இடத்தில் ,பரத்பூரைத்தேடி வருவதைப்போல -அந்த எண்ணிக்கையில் பறவைகள் இங்கே மிகுதியாக வருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார், அங்கிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர். அந்தக்குறையை ஈடுகட்டுவதற்காகவே செயற்கையான சதுப்பு நிலங்களை உருவாக்கும் முயற்சிகள் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறவைகளைத்தவிர வேறு பல உயிரினங்களின் புகலிடமாகவும் இச்சரணாலயம் விளங்குகிறது.பல இன மான்கள், பலவகைப்பாம்புகள்,நரி, ஓநாய், காட்டுப்பூனை,ஆமை, கரடி ,காட்டெருமைகள் எனப்பிரபஞ்சத்தின் ஜீவராசிகள் பலவற்றையும் இங்கே பார்க்க முடிகிறது. குறிப்பாகப் 'பைதான்'எனப்படும் மலைப்பாம்புகள், இந்த இடத்தில் அதிகம் இருப்பதால், அவற்றைப்பராமரிக்கவென்றே ஒரு தனி மையம் சரணாலயத்தினுள் இயங்கி வருகிறது. சூர்சரோவர் சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் ஒன்று,வன உயிர்களைப்பாதுகாக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தோடு (Willd life SOS)இணைந்து வனத்துறையினர் மேற்கொண்டுவரும் 'கரடிகள்மீட்பு-மறுவாழ்வுத்திட்டம்'. (AGRA BEAR RESCUE).சரணாலயத்தைச்சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது,அங்குள்ள கரடிகள் காப்பகத்தைக்காணுமாறு வனப்பொறுப்பாளர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தபோதுகூட அதன் பின்னணியிலிருந்த அடர்த்தியான சோகத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்திற்குச்சென்று, கரடிகள் பற்றிய குறும்படம்(ஆவணப்படம்)ஒன்றையும் பார்த்துவிட்டு, அங்கே வேலிக்குள் திறந்த வெளியில் உலவிக்கொண்டிருந்தபச்சிளம் கரடிக்குட்டிகளையும் கண்ட பிறகுதான் உண்மையான சிக்கல் இன்னதென்பது புரிபடத்தொடங்க,ஒரு கணம் மனம் கனத்துப்போயிற்று.

அடர்ந்த காட்டுப்பகுதிகளிலிருந்து,கரடிக்குட்டிகளை- அவை பிறந்ததுமே பிடித்து வந்து,அவற்றைவைத்து வித்தைகாட்டிப்பிழைப்பு நடத்துபவர்கள்,'கலந்தர்' என்னும் பிரிவைச்சேர்ந்த மக்கள். .கிட்டத்தட்ட நம்மூர் நரிக்குறவர்களைப்போன்றவர்கள் என்று அவர்களைக்கூறலாம்.அவர்களின் பிடியிலிருந்து குட்டிகளை மீட்டு வந்து, அவற்றுக்கு வனச்சூழலுடன் கூடிய மறு வாழ்வை அமைத்துத்தருவதே இத்திட்டத்தின் அடிப்படை.காலம் முழுவதும் கரடிவித்தைகாட்டியே பிழைப்பு நடத்திப்பழகிவிட்ட 'கலந்தர்'களுக்கு மாற்றுத்தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து- வேறுவகையான வாழ்வாதாரங்களை அவர்களுக்கு அமைத்துத்தருவதும் கூட இத்திட்டத்தின் ஒரு கூறாக இடம் பெற்றிருக்கிறது.
வனவிலங்குகளை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து பிரித்து வந்து காட்சிப்பொருளாக்கும் கொடுமயைக்குறைக்க இம்முயற்சிகள் ஓரளவு உதவியபோதும்,காட்டிலிருந்தும், தாயிடமிருந்தும் என்றோ பிரிந்து நகரச்சூழலுக்குள் வந்துவிட்ட கரடிகளுக்குத்தங்கள் பழைய வாழ்க்கைக்குத்திரும்புவது, சற்றுக்கடினமாகத்தான் இருக்கிறது.தாய்க்கரடியின் பாலைப்பருகி வளராத இவ்வகைக்குட்டிகளிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும்,தங்களுக்குப்பகையாக உள்ள விலங்குகளை இனம்கண்டு, ஈடு கொடுக்கும் போர்க்குணமும் குறைவாகவே உள்ளதாலும்,அவை மண்ணில் ஜனித்த மறுகணமே காட்டுச்சூழலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டதாலும் காடு என்பது அவற்றுக்கு மிரட்சியை ஊட்டும் ஒரு இடமாகவே அமைந்திருக்கிறது என்பது,விசித்திரமான,வேதனையளிக்கும் ஒரு முரண். அதனாலேயே வன வாழ்வுக்கு அவை ஆயத்தமாகும்வரை,விலங்கு மருத்துவர்களின் தனிப்பட்ட கண்காணிப்புக்கு உட்ப்படுத்தப்படுகின்றன; மனிதக்குழந்தைகளைப்போலப்புட்டிப்பால் அருந்திக்கொண்டு,தங்கள் ஆரோக்கியத்திற்காக அட்டவணைப்படுத்தப்பட்ட சத்துணவை இயந்திரத்தனமாக உண்டபடி...கம்பிவேலிக்குள் அமைதி உலா வருகின்றன. மீட்பும்,மறுவாழ்வும் சரியானவைதான் என்றபோதும்,அவற்றின் சுயமான வாழ்க்கைக்கு அவை திரும்பியாக வேண்டாமா என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, அதையே வினாவாக்கி உடன் வழிகாட்டுவோரிடம் முன் வைக்கிறோம்.காட்டு வாழ்க்கையை எதிர்கொள்ளத்தயாராகிவிட்ட கரடிகள், சுதந்திரமாக அவ்வாறே விடப்பட்டுவிடுகின்றன என்றும், இன்னமும் கூடக்காட்டைக்கண்டு மிரளும் சில கரடிகள், இறுதிவரையிலும்கூட அங்கேயே பராமரிக்கப்படுகின்றன என்றும் வரும் மறுமொழி, நம்மைத்துணுக்குற வைத்துவிடுகிறது.தங்கள் வேர்களை என்றோ துறந்துவிட்டு,அப்படித்துறந்துவிட்டதைக்கூட அறியாமல் இருக்கும் பாவப்பட்ட அந்த ஜீவன்கள், மனிதச்சுரண்டல்களின் மௌன சாட்சிகளாக அங்கே சுற்றிச்சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி,இதயத்தைப்பிசைகிறது.

சூர்சரோவருக்கு விடைகொடுத்துவிட்டுப்புதுதில்லி நோக்கி விரையும் வழியில்,தேநீருக்காக இறங்கியபொழுது,அங்கேயிருந்த கடைவாசலில் குரங்குகளை வைத்து வித்தைகாட்டிக்கொண்டிருந்த கூட்டம் ஒன்று கண்ணில் பட,அவற்றின் மறுவாழ்வுஎப்போது சாத்தியமாகப்போகிறதோ என்ற நினைப்பில்,தொண்டைக்குள் இறங்கிக்கொண்டிருந்த தேநீர் ,சிறிது கூடுதலாகவே சுடுகிறது

















கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....