''பெண்ணுக்கென்று கண்டிப்பாக ஒரு மொழி இருக்கிறது.பெண்ணின் விசனங்களை,இரசாயன மாற்றங்களை,அழகுணர்வுகளை ஓர் ஆணால் அப்படியே எழுத முடியாது.......வீரியமாக,நளினமாக,நாணம் கலந்து அத்தனை வலிகளுடன் அவள் சொல்வதைப்போல் ஓர் ஆணால் சொல்ல முடியாது.''என்பார் இரா.மீனாட்சி.
ஆண்டாளின் பக்தி உணர்வு காதலாகிப்பிறகு அதனோடு ஒருங்கிணைந்த காமமாகி, அனைத்தும் பேதமறக்கலந்துவிட்ட நிலையில்,''வாரணமாயிரம் சூழ வலம் செய்து''மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதான கனவும் அவளது ஆழ்மனதில் ஏற்பட்டபின்,கரம் பிடித்த மணவாளனோடு கூடி இல் வாழ்க்கை நடத்துவதான கற்பிதப்புனைவுகளையும் அவள்,கைக்கொள்ளத்தொடங்கி விடுகிறாள்.அதற்கான தடயங்களையும் நாச்சியார் திருமொழியில் காண முடிகிறது.
''நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டியகச்சங்கம்
நானும் அவனும் அறிதும்.....''
''ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ''
கண்ணனின் பீதாம்பரம் கொண்டு தனக்கு வீசுமாறு ஆண்டாள் கூறுவதும்,அவனது துழாயினையும்,வனமாலையையும்தனது கூந்தலிலும்,மார்பிலும் சூட்டுமாறு கூறுவதும் வழக்கமான நாயக-நாயகி மரபை ஒட்டியவை போலத்தோன்றலாம்;ஆனால்,அவனது 'அமுத வாயில் ஊறிய' நீரைக்கொணர்ந்து தன்னைப்பருகச்செய்து,தன் இளைப்பைப்போக்குமாறு கூறுவதும்,தன் உடல் உறுப்புக்களை அவனது தோளோடு இறுகக்கட்டுமாறு அவள் கதறுவதும் உடல்மொழியாக வெளிப்படும் பெண் மொழியின் அடையாளங்களையே கொண்டிருக்கின்றன.
கவிதைவெளியில் தானே புனைந்து வடிகால் தேடிக்கொண்ட கற்பிதங்கள்,ஒரு கட்டத்துக்கு மேல் பயன் தராதபோது-உடலின் எழுச்சிகள்,அவற்றையும் மீறி அவளை அலைக்கழிக்கும் தருணத்தில்,தன் மார்பையே வேராடு பறித்து,அவன் மீது வீசித்தன் அழலைத்தீர்த்துக்கொள்ளப்போவதான ஆவேசமும் அவளை ஆட்கொண்டு விடுகிறது.
''கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே''
கண்ணகியிடமிருந்து புறப்பட்டதாகச்சொல்லப்படும் கொங்கைத்தீயும்-எலும்பும்,நரம்பும் துருத்தும் பேயின் உடல்கொண்டு கண்டவர் மருளும் வண்ணம் தன்னை ஆக்கிக்கொண்ட காரைக்காலம்மையார்,
''......இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து
.........பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும்''
என ஆழ்மன வேகத்துடன் உரைத்ததும் மேற்குறித்த ஆண்டாள்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடு கொள்ளும்தருணங்கள் இந்த அளவுக்கு உக்கிரமாகப்பதிவாகியிருக்கின்றன என்றே கொள்ள முடிகிறது. ஆண்டாளுக்கும், காரைக்காலம்மைக்கும் நேர்ந்த இந்த அவலத்தை'மனோதத்துவ விபத்து ' என்று குறிப்பிடுவார்,நாவலாசிரியர் இந்திரா பார்த்த சாரதி.
பல்லாயிரக்கணக்கான குறியீடுகளுக்கும்,படிமங்களுக்கும் நெருக்கமானதாகச்சொல்லப்படும் பெண்மொழியின் இயல்புகளையும் ஆண்டாளின் பாடல்கள் பெற்றுள்ளன.'சிற்றில் சிதைத்தல்'என்ற படிமம்,கண்ணனைத்தோணியாகவும்,விளக்காகவும் குறிப்பிடும் போக்கு
''வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்''
''வேங்கட வாணன் என்னும் விளக்கினிற்புக என்னை விதிக்கிற்றியே''
ஆகியவையும்,'பாம்பணையான்','நாகத்தணை'என்னும் தொடர்களில் பொதிந்துள்ள பாம்பு என்ற குறியீடும் ஆண்டாளின் ஆழ்மன உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பவை.
அக உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மட்டுமன்றித் தன் சுயம்,தன் முடிவு ஆகியவற்றிலும் தீர்மானமாகச்செயல்பட்டவள் ஆண்டாள்.சமய அமைப்பில் தோய்ந்து கலக்கும் ஈடுபாடும்,சமயக்கடமைகளும் பெண்ணுக்கு மறுக்கப்பட்டுவந்த வைதீக மரபிலும்,தமிழ்ச்சூழலிலும் ஊறி வளர்ந்த ஆண்டாள்,பக்தி நெறியைத் தன் நெறியாகத்தானே தேர்ந்து கொண்டதுடன்,கவிஞர் என்ற தனித்த ஆளுமையுடனும் வெளிப்பட்டிருப்பதை,9ஆம் நூற்றாண்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதென்றே கூற வேண்டும்.
ஆண்டாளின் பிறப்புப்பின்னணியில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய ஆண்முதமைச்ச்மூகம்,அவளது இலக்கிய ஆளுமையின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை விளைவித்தது. இதுவும் பெண்ணிய நோக்கில் கவனம் பெறத்தக்கது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாளை ஏற்க -அவள்பெண் என்ற காரணத்தால் பக்திமரபு முதலில் தயக்கம் காட்டியது.அவளை ஒரு கவியாக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள்,அவள் பாடல்களைப்பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்)பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை''ஆண்டாளின் அகத்துறைப்பாடல்கள்,வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை.இதனாலேயே,ராஜாஜி,பெரியாழ்வாரே நாயகியாகத்தம்மைப்பாவித்துப்பாடிய பாடல்கள் இவை என்று கருத்துரைத்தாரோ''
என்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
பெண் அடியார்களின் போக்குகள்,மாற்றுக்கலாசார வெளிப்பாடுகளுக்கு வழியமைத்துக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆணாதிக்க சமுதாயம் அதனோடு ஒரு சமரசத்தைச்செய்து கொண்டு,அதன் எதிர்ப்புப்போக்கை பலமிழக்கச்செய்தது என்று ஏ.கே.ராமானுஜன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது. இச்சமரசத்தின் விளைவாகவே,திருப்பாவைக்கும்,'வாரணமாயிரம்' என்ற ஒரு பாடலுக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்டது என்றும்,ஆண்டாளின் பிற பாடல்கள்,''பால் ரீதியான வெளிப்படையான படிமங்கள் காரணமாகக்கோயில்களிலும்,ஏனைய பொது இடங்களிலும் .....ஓதப்படாமல்,பக்தி இலக்கிய மரபில் அதிகம் வெளிக்காட்டப்படாமல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டன''என்றும் ஈழ எழுத்தாளர்,செல்வி திருச்சந்திரனும் குறிப்பிட்டுள்ளார்.
ஔவையைமூதாட்டியாகவும்,காரைக்காலம்மையாரைப் பேயாகவும் மாற்றிய சமூக அமைப்பு,ஆண்டாளின் ஆளுமையினையும்,அவளது பாடல்கள் எற்படுத்திய அதிர்வுகளையும் இயல்பான போக்கில் எதிர்கொள்ளவும்,அங்கீகரிக்கவும் இயலாமல் தவித்தது; பிறகு அவளையும் பெரிய பிராட்டியாகக் கோயிலில் நிற்க வைத்து வழிபாடு செய்யத்தொடங்கிவிட்டது.
பெண்மொழியின் ஒரு கூறாக 'உடல்மொழி'என்பதுகருதப்பட்டாலும் பெண்ணுடல் பற்றிக்கிளர்ச்சி நோக்கிலும்,அதிர்ச்சி நோக்கிலும் மொழிவது,பெண்மொழியாகி விடுவதில்லை.பெண் இருப்பைப்பற்றிச்சமூக வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள பிரமைகளையும்,மதிப்பீடுகளையும் தகர்த்து,மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் கலகக்குரலாக ஒலிக்கும்பொழுதுதான்,பெண்மொழி,பெண்ணிய மொழியாகப்பரிமாணம் பெற முடியும்.
இந்தக்கோணத்தில் அணுகும்போதுதான் ஆண்டாள் முன்வைத்த 'உடல்மொழி', போதையூட்டும்பாலியல் கிளர்ச்சிக்காகச்சொல்லப்படவில்லைஎன்பதையும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட அவளது ஆழ்மனம் முன்வைத்திருக்கும் மாற்று அரசியலின் வெளிப்பாடாகவே அது ஒலித்திருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.
சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் உட்செரித்துக்கொண்டு,நனவு நிலையில் இயங்கிய பெண்ணியவாதியாக ஆண்டாளை இனங்காட்ட இயலாது.அவளது காலத்தில் நிலவிய சமூகக்கட்டுமானங்களுக்கு உட்பட்டுக்கணவன்,குடும்பம் ஆகிய சூழலில் வாழும் வாழ்க்கையே அவள் அவாவிய ஒன்று.அது கைகூடாமல் போய்விட்ட நிலையில்,அவளது மன உணர்வுகளை மடைதிறந்து கொட்ட,பக்திக்களம் பின்புலமாகிவிட...அவளது நனவிலி மனம்,தன்னையும் அறியாமல் 'பெண்மொழி'யை அவளிடமிருந்து வடித்துக்கொடுத்திருக்கிறது எனக்கொள்வதே ஆண்டாள் பற்றிய சரியான புரிதலாக இருக்க இயலும்.
1 கருத்து :
"ஆண்டாளின் பெண்மொழி--1,2,3"
மூன்று பதிவுகளும் நன்றாக இருக்கிறது.
''கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே''
ஆண்டாள் இப்படி பாடியிருப்பாள் என்று எதிர் பார்க்கவேயில்லை.அப்பப்பா! எவ்வளவு துணிச்சல்.
கருத்துரையிடுக